மருந்தகங்கள் ஊடாக போதை மாத்திரைகள் விற்பனை? – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் உள்ள சில மருந்தகங்கள் ஊடாகவும், மருந்தகங்கள் என்ற போர்வையிலும் போதை மாத்திரைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆபத்தான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளமை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாகப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட சில மருந்தகங்கள் இவ்வாறான போதை மாத்திரைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சிலர் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை மறைமுகமாக முன்னெடுப்பதற்குப் மருந்தகங்களை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஆயுர்வேத நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கும் சில இடங்களிலும் தடைசெய்யப்பட்ட கிளர்ச்சியூட்டும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த ஆபத்தான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு மாவட்ட மட்டத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகள் முழு மருந்தகத் துறைக்கும் உரித்தானவை அல்ல எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேர்மையான மருந்தக உரிமையாளர்களுடன் இணைந்து அரசாங்கம் செயற்படும் என உறுதியளித்தார்.
அத்துடன், தகுதி அல்லது தராசாதரங்களைப் பார்க்காது, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் தராதரம் பாராது ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.