சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த 'பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறக்கட்டளை' உருவாக்கம்
இலங்கையின் சட்டக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கல்விச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் 'சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறக்கட்டளை' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் இவ்வாரம் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இந்த அறக்கட்டளை முறைப்படி உருவாக்கப்பட்டது. இதில் சிரேஷ்ட கல்வியாளர்கள், சட்டத்துறை வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
போல் ரத்நாயக்க அசோசியேட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அறக்கட்டளைப் பத்திரத்தில், அதன் நிறுவுனராகப் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கையொப்பமிட்டார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மகேஷ் இந்திக கருணாதிலக்க, சட்டப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவா, இலங்கைச் சட்டக் கல்லூரியின் அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பிரசந்த லால் டி அல்விஸ் மற்றும் பேராசிரியர் பீரிஸின் மகளான கலாநிதி அமந்தி பண்டாரசேன ஆகியோர் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாகச் செயற்படவுள்ளனர்.
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கையின் சட்டங்கள் மற்றும் சட்ட அமைப்புகள் குறித்து எழுதியுள்ள 10 நூல்களிலிருந்து கிடைக்கும் அனைத்துக் காப்புரிமைப் பணமும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், அறக்கட்டளை நிதியத்தை உருவாக்குவதற்காக அவர் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு மில்லியன் ரூபாயை முதற்கட்டமாகப் பங்களிப்பாக வழங்கியுள்ளார்.
இந்த ஏற்பாட்டின் கீழ், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடம் மற்றும் இலங்கைச் சட்டக் கல்லூரி ஆகியவற்றின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் வளங்களை ஒதுக்குவதற்கு அறங்காவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, சட்ட ஆராய்ச்சி, தால்காலிகப் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள், நினைவுச் சொற்பொழிவுகள், மாதிரி நீதிமன்றப் பயிற்சிகள் மற்றும் விவாதப் போட்டிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சட்டத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், குற்றவியல் சட்டத்திற்கான 'பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தங்கம் பதக்கம்' ஒன்றினை நிறுவுவதற்குச் சட்டப் பீடம் தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் புஞ்சிஹேவா இந்நிகழ்வில் அறிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வுநிலை பேராசிரியருமான சாவித்திரி குணசேகர, பேராசிரியர் பீரிஸுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்களையும் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சட்டப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திய அதேவேளையில், கல்வித் தரத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் பல ஜனாதிபதி சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், சட்டக் கல்லூரி அதிகாரிகள் மற்றும் போல் ரத்நாயக்க அசோசியேட்ஸ் மற்றும் லேக் ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.