கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்: வரிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்!
கொழும்பில் சனிக்கிழமை (அக்டோபர் 03) மக்கள் போராட்ட இயக்கம் (Jana Aragala Movement) சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நியாயமற்ற வரி விதிப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், விண்ணைமுட்டும் வாழ்க்கைச் செலவுப் சுமையைக் குறைக்க வலியுறுத்தியும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொரளை கேம்பல் பிளேஸ் பகுதிக்கு அருகில் பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமான இந்தப் பேரணி, பொரளை சந்தியூடாகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கியவாறு பயணித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, அரசாங்கத்தின் தற்போதைய வரித் திட்டங்களை மிகக் கடுமையாகச் சாடினார். இத்தகைய நியாயமற்ற வரிக் கொள்கைகள் காரணமாகச் சாதாரண மக்களின் குடும்பப் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கட்டுப்படியாகாத விலை, சிறுவர்களின் மந்தபோஷனை , அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சுகாதாரத் தூய்மைப் பொருட்கள் மீதான அதிகப்படியான வரிகள் குறித்தும் அவர் தனது தீவிர கவலையை வெளியிட்டார். நாட்ட ஆட்சி செய்த அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த அவர், தற்போதைய மக்கள் விரோத வரிக் கொள்கைகளுக்கு எதிராகத் தமது அமைப்புத் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், வரவிருக்கும் தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் (budget) மக்கள் மீதான வரிச் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்த வசந்த முதலிகே, அதற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள தொடர் போராட்டங்களில் அனைத்துப் பொதுமக்களையும் ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுத்தார்.