கைதைத் தவிர்க்க முன்பிணை கோரி மனு: ஷிராந்தி ராஜபக்ச விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்பிணை மனு தொடர்பில் எதிர்வரும் அக்டோபர் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தமது சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் (FCID) பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்சவினால் நேற்றைய தினம் (05) தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவை பரிசீலித்த மாளிகாகந்தை நீதவான் ஜனனி பெரேரா இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (FCID) ஆஜராகுமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் தகவல்களின்படி, எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முன்பிணை மனுவில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் எதிர்மனுதாரராகவும் (Respondent), முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச மனுதாரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சிங்கப்பூருக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு முன்னாள் முதற்பெண்மணி நேற்றிரவு (05) இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.