காவன்திஸ்ஸ யானை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – விசாரணை சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு!
காவன்திஸ்ஸ என்ற தந்தம் கொண்ட யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளையும், வழக்கின் எதிர்கால நடவடிக்கைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க மஹவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மஹவ நீதவான் அனுருத்திகா சேனவிரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
வழக்கு விசாரணையின்போது, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், யானைகளும் தந்தம் கொண்ட யானைகளும் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ளடங்குவதில்லை என வாதிட்டனர்.
எனினும், அந்த வாதத்தை நிராகரித்த நீதவான், யானைகளும் தந்தம் கொண்ட யானைகளும் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளின்படி சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், Protect Elephant World Global Association சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணிகளான விஜித விக்கிரமநாயக்க மற்றும் சதகிரி பண்டார ஆகியோர், இலங்கையில் யானைகள் மற்றும் தந்தம் கொண்ட யானைகளின் உயிருக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
குறிப்பாக, பணம் சம்பாதிக்கும் நோக்கில் யூடியூபர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளும் காட்டு யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், காவன்திஸ்ஸ யானை அரச சொத்துச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் ஒன்றாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த விடயத்தில் நீதிமன்றமும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, உயிரிழந்த காவன்திஸ்ஸ யானையின் சடலப் பரிசோதனையை மேற்கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.பி.எம்.ஏ. விஜேசுந்தரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பிரேதப் பரிசோதனை அறிக்கையும் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது.
குறித்த அறிக்கையின்படி, யானையின் வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்திலிருந்து மூன்று துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ரவைகளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி பரிசோதனை செய்யுமாறு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு துப்பாக்கிகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து குறித்த ரவைகள் செலுத்தப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் வழக்குத் தரப்பினரின் மூன்றாவது சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.