கடுகண்ணாவ பகுதியில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மண்சரிவு; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, மண் மற்றும் பாறைகள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதால், அவ்வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கொழும்பு – கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் கடுகண்ணாவ பகுதியூடாகப் பயணிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளை, வீதிப் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.