ஐரோப்பாவில் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானங்கள்
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்துக்கொண்டிருந்த பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டதுடன், சில விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அயர்லாந்தின் டப்ளின் நகரிலிருந்து இத்தாலியின் ரோம் நகருக்குப் பயணித்த ஏர் லிங்கஸ் (Aer Lingus) விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸின் நார்மண்டி பகுதிக்கு விமானம் திருப்பிவிடப்பட்டது.
விமானத்தில் பயணத்தின்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது நார்மண்டியில் உள்ள எவ்ரூ (Evreux) இராணுவ விமானத் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த 151 பயணிகளும் ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விமானத்தில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சோதனைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏர் லிங்கஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் நார்மண்டிக்கு மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதாகவும், பயணிகளை அவர்களின் இறுதி இலக்குக்குக் கொண்டு சேர்ப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கேரியாவிலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூன்று விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோபன்ஹேகன் மற்றும் மட்ரிட் நகரங்களிலிருந்து பயணித்த இரண்டு விமானங்கள் தலைநகர் சோபியாவிலும், லண்டனிலிருந்து வந்த மற்றுமொரு விமானம் ப்லோவ்டிவ் நகரிலும் தரையிறக்கப்பட்டதாக பல்கேரிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹெல்சின்கியிலிருந்து ரோம் நோக்கிப் பயணித்த ஃபின்னேர் (Finnair) விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலிய விமானப்படையினர் அதனைப் பாதுகாப்பாக ரோம் நகருக்கு அழைத்துச் சென்றதாக இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, வார்சாவிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நோக்கிப் பயணித்த போலந்து விமான நிறுவனமான LOT இன் விமானமும் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதுடன், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செக் குடியரசிலும் பிராக் நகரை நோக்கிப் பயணித்த நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மிரட்டல்களின் நம்பகத்தன்மை குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றைப் புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்ட பொலிஸார், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானங்கள் தரையிறங்கிய பின்னர், வெடிபொருள் தொடர்பான விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் பிரித்தானியாவிலிருந்து வந்த இரண்டு விமானங்கள் உட்பட குறைந்தது ஏழு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டதுடன், சில விமான நிலையங்களின் செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த மிரட்டல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய அரசாங்கப் பேச்சாளர், திட்டமிட்டு விடுக்கப்படும் போலியான வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொள்வதற்குத் தமது நாடு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
எனினும், இந்த மிரட்டல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
விமானப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் விமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒஸ்ப்ரே ஃப்ளைட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிபுணர் மேத்யூ போரியின் கருத்துப்படி, ஐரோப்பாவை இலக்காகக் கொண்டு இவ்வாறான மிரட்டல்கள் விடுக்கப்படுவதன் பின்னணியில் ரஷ்யத் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேவேளை, ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஈரானின் மறைமுகப் போர் நடவடிக்கைகளும் தீவிரமாக இடம்பெற்று வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.