எரிபொருள் விநியோகக் குறைபாடு: நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்
Sinopec, RM Parks மற்றும் Lanka IOC நிறுவனங்களுடன் இணைந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், தங்களது நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டி கொழும்பில் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு (World Trade Centre) முன்பாக நேற்று (10) செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி, தங்களது முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை கையளித்தனர்.
மேலும், எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலையிடுமாறு கோரி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), சீனத் தூதரகம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுக்கும் கடிதங்களைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தனர்.
போதியளவு எரிபொருள் கிடைக்காமையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் தொடர்ந்து நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதனால் நுகர்வோர் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகக்கூடும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய எரிபொருள் விலை நிர்ணய முறையிலும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர். நடைமுறையிலுள்ள விலைகளில் இலாபகரமாக எரிபொருளை விற்பனை செய்ய முடியாத காரணத்தினால், தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, எரிபொருள் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், விலை நிர்ணயச் சூத்திரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் சுயாதீன அதிகாரசபையொன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்தப் பிரச்சினை தொடர்பில் விளக்கமளித்தனர்.
தற்போதைய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ் நிதி இழப்புகளைச் சந்திப்பதாகத் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், நடைமுறையிலுள்ள விலை நிர்ணயச் சூத்திரத்திற்கு உட்பட்டு, குறிப்பிட்ட வரம்புகளுக்குள் சில வகையான எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய, சில நிறுவனங்கள் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய நடைமுறைகளின் கீழ் தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் எரிபொருளின் அளவை அரசாங்கத்தினால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது என அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
அதேவேளை, நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதியளவு எரிபொருளைத் தொடர்ந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், தனியார் எரிபொருள் நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து, மேலதிக நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் எரிபொருள் விநியோகம் குறைவடைந்துள்ளதாகக் கவலைகள் எழுந்துள்ள போதிலும், நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், ஒட்டுமொத்தமாக எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.