உண்மை தெரியாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது! – சுந்தர்.சி
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் 3,000-க்கும் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் அதிகபட்சமாக 15 காட்சிகளில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’ திரைப்படம், எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சுந்தர்.சி, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தொடர்பாக இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், தான் இதுவரை பணியாற்றிய திரைப்படங்களில் அதிக உழைப்பைக் கோரிய படம் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனக் குறிப்பிட்டார்.
பொதுவாக நடிகர்களை மனதில் வைத்து திரைப்படங்களை உருவாக்குவதில்லை என்றும், முதலில் தனக்குத் தோன்றும் கதைக்கருவை மெருகேற்றி, அதற்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதே தனது வழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னிடம் ஏற்கெனவே ஒரு கதைக்கரு இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷைச் சந்தித்தபோது அவர் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்குவது குறித்துக் கேட்டதாகவும், அந்தத் தருணம் தனக்கு ஒரு தெய்வீக சக்தியின் வெளிப்பாடாகத் தோன்றியதாகவும் சுந்தர்.சி கூறினார்.
எனினும், தனது புதிய கதைக்கும் முதல் பாகமான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கருத வேண்டாம் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இரு திரைப்படங்களுக்கும் இடையில் தலைப்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ஊர்வசி ஆகிய நான்கு ஒற்றுமைகள் மட்டுமே இருப்பதாகவும், இந்தப் படத்தில் ஊர்வசியைத் தான் விரும்பி நடிக்க வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகால உழைப்பு
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டபோது, அது இவ்வளவு பிரம்மாண்டமான படைப்பாக உருவாகும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த சுந்தர்.சி, தானும் வெங்கட்டும் இணைந்து சுமார் இரண்டு ஆண்டுகள் இப்படத்திற்காக உழைத்ததாகக் கூறினார்.
மேலும், தனது குழுவைச் சேர்ந்த சுமார் 800 பேர் ஒன்றரை ஆண்டுகால உழைப்பை இப்படத்திற்காக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்காக சுமார் 400 கலைஞர்கள் இரவு பகலாக ஒன்றரை ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய உழைப்பை அறியாமல் சிலர் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், விமர்சனங்கள் தன்னை ஒருபோதும் பாதித்ததில்லை என்றும், ஆனால் உண்மை நிலவரத்தை அறியாமல் முன்வைக்கப்படும் கருத்துகள் மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை எனச் சிலர் இணையத்தில் கருத்துத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் தான் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் கூறினார்.
எதிர்காலத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைத் தாண்டி செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என்பது வேறு விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகக் கலைஞர்களின் பங்களிப்பு
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுந்தர்.சி தெரிவித்தார்.
படத்தைப் பார்த்த பின்னர் காட்சிகள் சிறப்பாக இருந்தால் பாராட்டுமாறும், குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுமாறும் கேட்டுக்கொண்ட அவர், அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இப்படத்தில் 3,000-க்கும் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் அதிகபட்சமாக 15 காட்சிகளில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இப்படம் ஒரு கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படம் எனக் குறிப்பிட்ட சுந்தர்.சி, நயன்தாரா கதாநாயகியாகவும் ரெஜினா வில்லியாகவும் நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இப்படத்தின் உண்மையான கதாநாயகர்கள் என்று குறிப்பிட வேண்டுமானால், இதற்காக உழைத்த 800 பேரையுமே குறிப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம், எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.