உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பாணை
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரரை, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது பொலிஸ் அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக கஸ்ஸப தேரர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை (11) காலை 10 மணிக்கு கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் இரண்டாம் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தேரருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
உடமலுவ பொலிஸ் நிலையத்தின் ஊடாக இந்த அறிவித்தல் தேரருக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், குறித்த தினத்தில் அவர் விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை என்பதுடன், தன்னால் ஆஜராக முடியாததற்கான காரணத்தையும் அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு குறிப்பிட்டு புதிய அழைப்பாணையை வழங்குவதற்கு உடமலுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பௌத்த பிக்குகளில் பலாங்கொட கஸ்ஸப தேரரும் ஒருவராவார்.