இலங்கையில் TIN நடைமுறையில் முக்கிய மாற்றம் – 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிப்பு!
இலங்கையில் எட்டு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்திருந்த இந்தக் கட்டாய நடைமுறைக்கு மேலதிகமாக ஐந்து மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதுடன், இணையவழிப் பதிவு முறைமையிலும் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருந்தன.
இதன்படி, TIN கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய எட்டு பரிவர்த்தனைகளாவன:
1. வங்கிக் கணக்குகளைத் திறத்தல்.
2. கட்டிடத் திட்ட அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்.
3. வாகனங்களைப் பதிவு செய்தல்.
4. வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல்.
5. காணிகளைப் பதிவு செய்தல்.
6. வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல்.
7. நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
8. கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல்.
இதேவேளை, வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே தற்காலிகச் சலுகைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.