இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!
இலங்கையின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மின்சார விநியோகக் கட்டமைப்பை நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருளைச் சேமித்து வைக்கும் வகையில் எரிபொருள் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, முத்துராஜவெல பகுதியில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான குழாய்க் கட்டமைப்பை நிர்மாணித்தல் மற்றும் 92,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிபொருள் சேமிப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக 22.34 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொலன்னாவை முதல் துறைமுகம் வரையிலான எரிபொருள் குழாய்க் கட்டமைப்புத் திட்டத்திற்காக 16,332 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்விப்பத்திரங்களும் கோரப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் ஊடாக எரிபொருளை கப்பல்களில் இருந்து இறக்குவதற்குத் தற்போது தேவைப்படும் 96 மணித்தியாலங்கள், 48 மணித்தியாலங்களாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 மாதங்களுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எரிபொருள் கப்பல்களைத் தாமதப்படுத்துவதால் ஏற்படும் மேலதிகக் கட்டணங்களையும் குறைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வாறான தாமதங்களால் ஒவ்வொரு நாளும் கப்பல் நிறுவனங்களுக்கு சுமார் 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மின்சார மீற்றர்கள் இலவசமாக வழங்கப்படும்
இதற்கிடையில், மாதாந்தம் 180 அலகுகளுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தும் 300,000 நுகர்வோருக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்சார மீற்றர்களை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கை மின்சார நிறுவனத்தின் (LECO) கீழ் 120 அலகுகளுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீற்றர்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சூரிய மின்சக்தி மின்கலங்களுக்கு மானியம்
வீடுகளில் கூரைமீது சூரிய மின்கலத் தொகுதிகளை நிறுவுவதுடன், மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் மின்கலக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நிதி மானியத் திட்டமொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, புதிதாக சூரிய மின்சக்திக் கட்டமைப்புகளை நிறுவும் வீடுகளுக்கு, ஒவ்வொரு கிலோவாட் மணித்தியாலம் (kWh) மின்சாரச் சேமிப்புத் திறனுக்கும் 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக 10 kWh சேமிப்புத் திறன் கொண்ட மின்கலக் கட்டமைப்புகளுக்கு 250,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், சூரிய மின்சக்தி சேமிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை (PAL) நீக்குவதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்தத் திட்டங்கள் ஊடாக நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், எரிபொருள் விநியோகச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.