இலங்கையில் இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 2,381 பேர் உயிரிழப்பு – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் 2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 2,257 மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்துக்களில் 2,381 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வீதிவிபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்ட அவர், அதிவேகமாக வாகனம் செலுத்துதல் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியன மரணத்தை ஏற்படுத்தும் விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 785 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், 227 பேர் பாதசாரிகள் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சுமார் 60 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறிப்பாக இளம் வயதினர் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் எச்சரித்தார்.
பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் கூடுதல் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதிவேகமாகவும் பொறுப்பற்ற முறையிலும் வாகனங்களைச் செலுத்துவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற மூன்று பேருந்துகள் மோதிய கோர விபத்து குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், சாரதிகளுக்கு இடையிலான போட்டித்தன்மையான வாகனச் செலுத்தல் மற்றும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயற்சித்தமை ஆகியன விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், 76 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் 609 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சுமார் 10,000 போக்குவரத்துப் பொலிஸார் வீதி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதுடன், பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி, பயணிகள், பாதசாரிகள் மற்றும் ஏனைய வீதிப் பயனாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வாகன சாரதிகள் தங்களது இலக்குகளைப் பாதுகாப்பாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே போக்குவரத்துப் பொலிஸாரின் பிரதான பொறுப்பு என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.