இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவானது! பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை பெய்யும் அபாயம்
இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டலத் தாழ்நிலைத் தளம்பல், தாழமுக்கப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், நாட்டின் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதன்கிழமை (21) பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இந்தத் தாழமுக்கத்தின் தாக்கத்தால் ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள ஆழ்கடல், ஆழமற்ற கடல் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அதிகாலை வேளையில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்கப் பகுதியின் நிலைமையில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள், குறிப்பாக கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.