இறந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்த விவகாரம்: முன்னாள் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரி விளக்கமறியலில்!
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உயிரிழந்த யானையொன்றின் தந்தத்தை வெட்டி எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரியை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்று (05) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது விசாரணைகளின்போது கைப்பற்றப்பட்ட பல பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கஹட்டகஸ்திகிலிய, கயங்கொல்லேவ பகுதியில் தந்தங்களைக் கொண்ட ஆண் யானையொன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேற்று முன்தினம் (04) வனவிலங்கு அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, உயிரிழந்த யானையின் தந்தத்தை வெட்டி அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரும்பு அறுவைக்கருவி ஒன்றும், யானை உயிரிழந்த இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் தாவரப் பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபருக்குச் சொந்தமான பயிர்ச்செய்கைக் காணியில் அமைந்துள்ள குடிசையொன்றிலிருந்தே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இரண்டு பெற்றோல் போத்தல்கள் மற்றும் யானை வெடிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது வீட்டுத் தோட்டத்திலிருந்து பொறி துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானையின் பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அதன் வலது பக்கத் தந்தத்தையும் இடது பக்கத் தந்தத்தின் எஞ்சிய பகுதியையும் வனவிலங்கு அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.