இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியாவின் பாதுகாப்புப் படையிடம் சுமார் 190 அணுஆயுதங்கள் (Nuclear weapons) இருக்கக்கூடும் என சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான ‘புல்லடின் ஆஃப் தி அடாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சி, நாட்டின் தற்காப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
வெறும் அணுஆயுதங்களைக் கொண்டிருப்பதுடன் நின்றுவிடாமல், எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஏவுகணை அமைப்புகளையும் இந்தியா கொண்டுள்ளது. அந்தவகையில், சக்திவாய்ந்த அணுகுண்டுகள் மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளுடன், எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் நவீன நீண்டதூர ஏவுகணை அமைப்புகளை இந்தியா கைவசம் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுஆயுதங்களை ‘முதலில் பயன்படுத்துவதில்லை’ (No first use policy) என்ற கொள்கையை இந்தியா உறுதியாகப் பின்பற்றி வரும் அதேவேளையில், அணுஆயுதங்களைச் செலுத்தும் அமைப்புகளைத் தொடர்ந்து நவீனப்படுத்தி வருகிறது. இதற்கமைய, தரை, வான் மற்றும் கடல் ஆகிய மூன்று வழிகளிலிருந்தும் அணுஆயுதத் தாக்குதல்களை நடத்தும் முழுமையான ‘நியூக்ளியர் ட்ரையாட்’ (Nuclear triad) கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருவதாக ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், தனது உத்திசார் பாதுகாப்பு விஷயங்களில் தீவிர ரகசியத்தன்மையைப் பேணிவரும் இந்தியா, தனது அணுஆயுதங்களின் முழுமையான திறன், விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் அவற்றின் உண்மையான தாக்குதல் எல்லை குறித்த விபரங்களை ஒருபோதும் பகிரங்கமாக வெளியிடுவதில்லை. இதனால், பொதுவெளியில் அறியப்படும் தரவுகளை விட இந்தியாவின் உண்மையான அணுஆயுதத் திறன் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.