ஆஸ்திரேலியாவில் ரக்பி ஆதரவாளர்கள் மீது கார் மோதி விபத்து: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
ஆஸ்திரேலியாவின் நியூகாசில் நகரில், ரக்பி லீக் விளையாட்டின் ஆதரவாளர்கள் திரண்டிருந்த கூட்டத்திற்குள் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக 'News.com.au' செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இண்டிக பாம்ப்ரிக் சமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர் மீது, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியமை, அலட்சியமாக வாகனத்தைச் செலுத்தி படுகாயங்களை ஏற்படுத்தியமை மற்றும் தவறான நடத்தையின் மூலம் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றப் பதிவுகளின்படி, சந்தேகநபரான சமரசிங்கவின் ஓட்டுநர் உரிமம் கடந்த பிப்ரவரி மாதம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அந்த இடைநிறுத்தத்திற்கு எதிராக அவர் ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை பிணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பிணை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், சிறைச்சாலை சுகாதார அதிகாரிகளால் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு வரும் அக்டோபர் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் நடந்த பின்னணி:
நியூகாசில் நைட்ஸ் அணியை வழி அனுப்பும் நிகழ்விற்காக, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நியூகாசில் லிங்க் வீதியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தபோதே இக்கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனத்தைச் செலுத்தியவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அங்கு நின்றிருந்த ஆதரவாளர்கள் மீது கார் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். 2 வயது முதல் 67 வயது வரையிலான 10 பேர் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் ஜோன் ஹண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 5 வயதுடைய சிறுமி ஒருவர் இதய செயலிழப்புக்கு உள்ளாகிய நிலையில், தலையில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் காரணமாக செயற்கை மயக்க நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 67 வயதுடைய முதியவரின் நிலைமையும் தற்போது முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் 2 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகள், 31 மற்றும் 63 வயதுடைய இரு பெண்கள், மற்றும் 24, 25, 48, 57 வயதுடைய நான்கு ஆண்கள் காயமடைந்திருந்தனர். அவர்களில் மூவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் சீரான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட சாரதி, கட்டாய மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என நியூ சவுத் வேல்ஸ் (NSW) பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரை கட்டுப்பாடற்ற முறையில் செலுத்தியதால் விபத்து நிகழ்ந்ததாகவும், சம்பவ இடத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கோபமடைந்து தாக்குதலில் ஈடுபட முயன்றதால், சாரதி மற்றும் காரிலிருந்த இரு பயணிகளையும் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுச் சென்றதாகவும் உதவி பொலிஸ் ஆணையாளர் டேவிட் வாடெல் தெரிவித்தார்.
சாரதியும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றவர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் என்றும், எதிர்பாராதவிதமாகவே கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கக்கூடும் என்றும் நியூகாசில் நகர மேயர் கெவின் மோரிஸ் தெரிவித்துள்ளார்.