அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறுவர் திருமணங்களுக்கு முழுமையான தடை
கலிபோர்னியா மாநிலத்தில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் திருமணங்கள் மற்றும் சட்டப்பூர்வ இணையர் முறைகளை முழுமையாகத் தடை செய்வதற்கான சட்டமூலத்தில் மாநில ஆளுநர் கெவின் நியூசம் புதன்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.
சான்டா குரூஸ் (Santa Cruz) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கெயில் பெல்லரின் (Gail Pellerin) முன்வைத்த 'ஏ.பி 1267' (AB 1267) சட்டமூலத்தின் மூலமே இப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவர்கள் திருமணம் செய்வதையோ அல்லது சட்டப்பூர்வ இணையர்களாக வாழ்வதையோ அனுமதித்த பழைய சட்டப் பிரிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
புதிய சட்டம் குறித்து கருத்து வெளியிட்ட ஆளுநர் கெவின் நியூசம், "கலிபோர்னியாவின் சிறுவர்களையும் இளைஞர்களையும் பாதுகாப்பதற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவாகும். இதன் மூலம் கலிபோர்னியா மாநிலச் சிறுவர்கள் முன்னெப்போதையும் விட பாதுகாப்பான சூழலைப் பெற்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் 17 மாநிலங்கள் ஏற்கெனவே சிறுவர் திருமணங்களை எவ்வித விதிவிலக்குகளுமின்றி முழுமையாகத் தடை செய்துள்ளன. அதேவேளை, திருமணத்திற்கு என ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச வயதைச் சட்டப்பூர்வமாக வரையறுக்காத அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் கலிபோர்னியாவும் ஒன்றாக இருந்து வந்தது. பழைய சட்டத்தின் கீழ், பெற்றோரின் சம்மதம் மற்றும் நீதிமன்ற அனுமதியுடன் சிறுவர்கள் திருமணம் செய்ய வழிவகை இருந்தது.
'குளோபல் ஹோப் 365' (Global Hope 365) எனும் அரச சார்பற்ற அமைப்பின் தகவலின்படி, 2000ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கலிபோர்னியாவில் சுமார் 35,000 சிறுவர் திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வயது வந்த ஆண்களைச் சிறுமிகள் திருமணம் செய்த சம்பவங்களாகும்.
ஆளுநர் இச்சட்டமூலத்தில் கையொப்பமிட்ட நிகழ்வில், ஊடகவியலாளரும் சிறுவர் திருமணப் பாதிப்பில் இருந்து மீண்டவருமான கோர்ட்னி ஸ்டாடன் கலந்து கொண்டார். 16 வயதாக இருந்தபோது, 51 வயதுடைய டக் ஹட்சின்சன் என்ற நடிகரைத் திருமணம் செய்ய இவரது பெற்றோர் அனுமதி அளித்திருந்தனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த கோர்ட்னி ஸ்டாடன், "ஆளுநர் நியூசமின் இந்நடவடிக்கை, சிறுவர் திருமணங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு பெரிய ஆறுதலாகும். இத்தகைய பாரமான அனுபவங்களை நாம் சுமக்கக் கூடாது என்பதை இது உணர்த்தியுள்ளது. கலிபோர்னியாவில் இது ஒரு பெரிய வெற்றியாகும். ஆனால் நான் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை, அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் சிறுவர் திருமணங்கள் முழுமையாகத் தடை செய்யப்படும் வரை எனது போராட்டம் தொடரும்" எனக் குறிப்பிட்டார்.
தற்போது அமெரிக்காவின் மிசிசிப்பி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகிய மாநிலங்களில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது சட்டப்படி நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், 32 மாநிலங்களில் சில நிபந்தனைகளின் கீழ் 18 வயதிற்குட்பட்டோர் திருமணம் செய்வது இன்னும் சட்டப்பூர்வமாகவே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.