ரஷ்யாவின் 51% எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அழித்ததாக உக்ரைன் அதிரடி அறிவிப்பு!
ரஷ்யா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள உக்ரைன், அந்நாட்டின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 51 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியைத் தமது நீண்டதூரத் தாக்குதல்கள் மூலம் வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 42 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், ரஷ்யப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை முடக்கும் நோக்கில் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தலைநகர் மொஸ்கோ , யாரோஸ்லாவ்ல் (Yaroslava), உஸ்ட்-லூகா (Ust-Luga), பெர்ம் (Perm), சராடோவ் (Saratov) மற்றும் சிஸ்ரான் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலமே இந்நடவடிக்கை சாத்தியமாக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இந்த உரிமைகோரலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
சுமார் 1,200 கிலோமீற்றர் நீளமான போர்க்கள எல்லையில் முன்னேற்றங்கள் மந்தமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களை கடுமையாக அதிகரித்துள்ளன.
ரஷ்யாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு
மொஸ்கோ முதல் சைபீரியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, ரஷ்யாவில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெட்ரோல் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு ரஷ்ய அதிகாரிகள் தள்ளப்பட்டனர்.
தமது எரிபொருள் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த புள்ளிவிவரங்களை ரஷ்யா வெளியிடவில்லை என்றபோதிலும், சர்வதேச விவகாரங்களுக்கான 'வால்டாய் கிளப்' (Valdai Club) மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , இத்தாக்குதல்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 1 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். "எமது பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே அவர்கள் சுத்திகரிப்பு ஆலைகளைத் தாக்குகின்றனர். அதில் அவர்கள் பகுதியளவில் வெற்றியும் பெற்றுள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாக்குதல்கள் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் யெவ்கேனி கினியாரா கருத்துத் தெரிவிக்கையில், "எதிரியின் சுத்திகரிப்புத் திறனில் 51 சதவீதத்தை முடக்கியிருப்பது அவர்களின் பொருளாதாரத்திற்கும், படைகளுக்குப் போர்ப் பொருட்களை விநியோகிக்கும் திறனுக்கும் கொடுக்கப்பட்ட பலத்த அடியாகும். எமது தாக்குதல்கள் ரஷ்ய நிலப்பரப்பிற்குள் போரைக் கொண்டு சென்றுள்ளன" என்றார்.
உலகளவில் கச்சா எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்து ரஷ்யா 3வது இடத்தில் உள்ளது. சர்வதேச எரிசக்தி முகவர் (IEA) தரவுகளின்படி, ரஷ்யாவின் 32 சுத்திகரிப்பு ஆலைகளில் சில ஆலைகள் இதுவரை 15 முறைக்கும் அதிகமாகத் தாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக டீசல் உற்பத்தி 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கார்க்கிவ் நகரில் ரஷ்யாவின் குண்டுவீச்சு: நால்வர் பலி
இதனிடையே, உக்ரைனின் கார்க்கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுவீச்சில் (guided aerial bomb) 3 பேர் உயிரிழந்ததுடன், 3 குழந்தைகள் உட்பட 39 பேர் காயமடைந்துள்ளதாக நகர மேயர் இஹோர் தெரெகோவ் (Ihor Terekhov) தெரிவித்துள்ளார். குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுலோவியான்ஸ்க் பகுதி மீது நடத்தப்பட்ட வேறொரு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உக்ரைனிய விமானப் படையின் தகவல்படி, ரஷ்யா ஒரே இரவில் 205 ட்ரோன்களை (drones - ஆளில்லா வான்வழி ஊர்திகள்) ஏவியதாகவும், அவற்றில் 172 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அல்லது முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருங்கடலில் வணிகக் கப்பல் மூழ்கடிப்பு
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால் கருங்கடலில் தானியங்களைச் சுமந்து சென்ற துருக்கிக்குச் சொந்தமான வணிகக் கப்பல் ஒன்று தீப்பற்றி மூழ்கியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 11 மாலுமிகள் ருமேனிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் எதிர்ப்புக் கணையைக் குலைக்க ரஷ்யா முயல்வதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.