சோமாலிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூடு: இந்தியர் உட்பட 5 கப்பல் ஊழியர்கள் பலி!
சோமாலியக் கடற்பகுதியில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உட்பட ஐந்து கப்பல் ஊழியர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான 'புண்ட்லாண்ட்' (Puntland) பகுதியின் கடல்சார் காவல் படை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சோமாலியத் தலைநகர் மொகதிசுவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த 'எம்டி ஹானர் 25' (MT Honor 25) என்ற எரிபொருள் சுத்திகரிப்புக் கப்பலைக் கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருந்தனர். குறித்த கப்பலில் 18,500 பீப்பாய் எரிபொருளும், 17 ஊழியர்களும் இருந்தனர்.
இந்நிலையிலேயே, 'தரின்-பார்' (Darin-Bar) பகுதியில் கடல்சார் பாதுகாப்புப் படையினர் சிறப்பு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கப்பலைக் கடத்திய சோமாலியக் கொள்ளையர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய முன்வந்துள்ளனர்.
எனினும், அதற்கு முன்னதாகவே கப்பலில் இருந்த 5 ஊழியர்களைக் கொள்ளையர்கள் கொடூரமாகச் சுட்டுக்கொன்றுள்ளதாகப் படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு இந்தியர், மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் அடங்குகின்றனர். கப்பலில் இருந்த ஏனைய 12 ஊழியர்களில் 10 பேர் பாகிஸ்தானியர்கள் ஆவர்.
தற்போது 'எம்டி ஹானர் 25' கப்பலானது பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் 16 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தப்பிச் சென்ற ஏனைய கொள்ளையர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மற்றொரு கப்பல் மீட்பு
இதேவேளை, டோகோ (Togo) நாட்டுக்கொடியுடன் செங்கடலில் பயணித்தபோது சோமாலியக் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 'எம்டி யூரேகா' (MT Eureka) என்ற மற்றொரு எரிபொருள் கப்பலும், அதிலிருந்த 12 ஊழியர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட 8 எகிப்தியர்கள் மற்றும் 4 இந்தியர்கள் அடங்கலாக 12 ஊழியர்களும் தற்போது அப்பகுதி மக்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.