அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் பெறுமதியான அபூர்வ வைரம் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற 'கிரேட்டர் ஒஃப் டயமண்ட்ஸ்' தேசிய பூங்காவில், நபர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட பிரமாண்ட வைரம் ஒன்று சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதியுடையதாக இருக்கலாம் என உரிமை கோரப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் உதவிப் படைவீரரான ஜேக் பேரடின் மற்றும் அவரது நண்பர் இணைந்து மேற்கொண்ட அகழ்வு ஆராய்ச்சியின்போதே, இந்த 6.03 கரட் (Carat) எடையுள்ள மஞ்சள் நிற வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம் தேடும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு வரும் பேரடின், இதுவரை 300க்கும் மேற்பட்ட வைரங்களைக் கண்டுபிடித்துள்ளார். எனினும், இம்முறை கிடைத்துள்ள வைரமானது இதுவரை அவர் கண்டெடுத்தவற்றிலேயே மிகவும் தனித்துவமானது என்றும், சேகரிப்பாளர்கள் இதன் மதிப்பை 1 மில்லியன் டொலர்கள் வரை மதிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனுபவமிக்க இரத்தினக்கல் மதிப்பீட்டாளர் ஒருவர், இதன் அளவு மற்றும் தரத்தின் அடிப்படையில் இதன் சந்தைப் பெறுமதி சுமார் கால் மில்லியன் (2,500,000) அமெரிக்க டொலர்களாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வைரலான கண்டுபிடிப்பு
வைரம் கண்டெடுக்கப்பட்ட தருணத்தை பேரடின் சமூக வலைத்தளமான டிக்டொக்கில் (TikTok) நேரலையாகப் பதிவு செய்துள்ளார். அதில், வாலியில் இருந்த கூழாங்கற்களைக் கழுவி மேசையில் கொட்டி ஆராய்ந்தபோது, பளபளப்பான 6.03 கரட் வைரம் வெளிப்பட்டதும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
ஒரு மனிதனின் கைநகம் அளவிலான இந்த வைரமானது, நடப்பு ஆண்டில் இந்த தேசிய பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாகப் பதிவாகியுள்ளது. 'அமெரிக்கன் ட்ரீம்' (American Dream - அமெரிக்கக் கனவு) என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை, தனக்கு உதவிய சக நண்பருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும், அதன் மூலம் சொந்தமாகப் பளிங்குக்கல் சுரங்கம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பேரடின் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான வைரம் தேடும் களம்
1972 ஆம் ஆண்டு அரசாங்கப் பூங்காவாக மாற்றப்பட்ட இந்த இடத்தில், இதுவரை 37,000 க்கும் மேற்பட்ட வைரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 15 அமெரிக்க டொலர்கள் நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி, பொதுமக்களே நேரடியாக வைரங்களைத் தேடவும், அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ளவும் உலகில் அனுமதிக்கப்படும் அரிதான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
அமெரிக்காவில் இயற்கை வைரம் கிடைக்கும் இரு முக்கியப் பகுதிகளில் ஒன்றான இந்த பூங்காவில், ஆண்டுதோறும் சராசரியாக 400 முதல் 800 வைரங்கள் வரை கண்டெடுக்கப்படுகின்றன. இதற்கு முன்னர், 1924 ஆம் ஆண்டில் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய வைரமாகக் கருதப்படும் 40.23 கரட் எடையுள்ள 'அங்கிள் சாம்' (Uncle Sam) என்ற வைரம் இந்த இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.