ஆனைமடுவை ஆதார வைத்தியசாலையில் 50 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்
ஆனைமடுவை ஆதார வைத்தியசாலையின் நான்கு வார்டுகளை புனரமைக்கும் 50 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டத்தின் பணிகள் நேற்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும், புத்தளம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், பிரதேச மக்களுக்கு மிகவும் திறமையானதும் உயர்தரமானதுமான சுகாதார சேவையை வழங்குவதனை நோக்கமாக்கக் கொண்டுள்ளது.
குறித்த நான்கு வார்ட் கட்டடங்களினதும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புத் தரங்களை மிக விரைவில் உகந்த நிலைக்குக் கொண்டுவருவதும் இதன் பிரதான இலக்காகும்.
இதனைத் தொடர்ந்து, புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கட்டடப் பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் சந்தன அபேரத்ன, வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் வைத்தியசாலைச் சூழல் குறித்தும் அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.