ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நான்காவது முறையாக இணையும் தனுஷ்!
பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலில் நடித்த திரைப்படம் ‘ராஞ்ஜனா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு வெளியான ‘அத்ரங்கி ரே’ திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இதில் அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதையடுத்து, தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றுக்காக இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காலகட்டப் பின்னணியில் உருவாகும் இப்படம், ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த கதைக்களத்தைக் கொண்டதாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.