அமெரிக்கா – ஈரான் இடையே இராஜதந்திரப் பேச்சுவார்த்தை: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 7 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலான இணக்கப்பாடு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் திங்கட்கிழமை (02) 7 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த சில மாதங்களில் ஒரே நாளில் பதிவான மிகப்பெரிய விலை வீழ்ச்சிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
எட்டு மாதங்களாகத் தொடரும் அமெரிக்கா – ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை கடுமையாகச் சரிவடைந்தது.
எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி, பணவீக்கம் தொடர்பான அச்சத்தைக் குறைத்துள்ளதுடன், நீண்டகால அமெரிக்க திறைசேரிப் பத்திரங்களின் வருவாய் விகிதங்களும் குறைவடைந்துள்ளன.
அமெரிக்காவின் 10 ஆண்டுகால திறைசேரிப் பத்திரங்களின் வருவாய் விகிதம் 4.9145 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், 30 ஆண்டுகால பத்திரங்களின் வருவாய் விகிதம் 5.2868 சதவீதமாக நிலைத்திருந்தது.
இவ்விரு பத்திரங்களின் வருவாய் விகிதங்களும் முந்தைய வர்த்தக அமர்வில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த மட்டத்தை எட்டியிருந்தன.
இதற்கிடையில், அமெரிக்க டொலரின் பெறுமதி செவ்வாய்க்கிழமை (03) சற்றுக் குறைவடைந்துள்ளது.
யூரோ மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதியை அளவிடும் டொலர் சுட்டெண் 101.76 ஆகப் பதிவாகியுள்ளது. இது திங்கட்கிழமை ஒரு மாதத்தில் இல்லாத மிகக் குறைந்த மட்டத்தை எட்டியிருந்தது.
மறுபுறம், அவுஸ்திரேலிய மத்திய வங்கியின் வட்டி வீதத் தீர்மானம் வெளியாகவுள்ள நிலையில், அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி பெரிய மாற்றமின்றி நிலைத்திருந்தது.