அனோஜன் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் பேரணி!
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராஜாவின் விடுதலையை உடனடியாக வலியுறுத்தி, வவுனியா மாவட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் பொது அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசாமி கோவில் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வுப் பேரணி, நகரின் பிரதான வர்த்தக மையமான பஜார் வீதி வழியாக தர்மலிங்கம் வீதியைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து, கொரவப்பத்தான வீதி ஊடாக நகர்ப்புற பள்ளிவாசல் வரை பேரணி அமைதியான முறையில் நகர்ந்து சென்று நிறைவுற்றது.
வெள்ளிக்கிழமை மதிய தொழுகையை அடுத்து, ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பேரணியில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இந்த கூட்டுப் போராட்டம் பிராந்தியத்தில் பெரும் சமூக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
பேரணியின் நிறைவில் இந்து, இஸ்லாமிய மற்றும் பௌத்த மதத் தலைவர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய மதத் தலைவர்கள், அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் உடனடியாக தலையிட்டு ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களால் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மகஜரில் திரளானோர் கையொப்பமிட்டனர். குறித்த மகஜர் இலங்கை ஜனாதிபதி, கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.