மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரி கொழும்பில் இன்று GMOA போராட்டம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்று (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
இந்தப் போராட்டத்தில், சங்கத்தின் மாவட்ட மற்றும் மாகாணக் கிளைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்கவுள்ளதாக GMOAவின் உதவிச் செயலாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, மருத்துவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தப் போராட்டம் வேலைநிறுத்தப் போராட்டமாக அமையாது என்றும், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான சிகிச்சைச் சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறினால், இன்றைய போராட்டம் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக மட்டுமே அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், நவம்பர் 12ஆம் திகதி மாலைக்குள் மருத்துவர்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் கிடைக்கும் என நம்புவதாகவும் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டுச் சுகாதாரப் பணியாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. தம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.