நுவரெலியாவில் உணவகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
நுவரெலியா நகரிலுள்ள உணவகம் ஒன்றில் மாணவி ஒருவர் தவறவிட்ட கைப்பையை மற்றொரு பெண் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்குச் சொந்தமான கைப்பையே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த மாணவி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டனுக்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த 09ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது, நுவரெலியா நகரின் மத்தியிலுள்ள உணவகம் ஒன்றில் குடும்பத்தினருடன் மதிய உணவு உட்கொண்ட அவர், தனது கைப்பையை இருக்கையில் வைத்துவிட்டு, அதனை மறந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
மறுநாள் மீண்டும் குறித்த உணவகத்திற்குச் சென்று கைப்பை தொடர்பில் விசாரித்தபோது, அங்கு வருகை தந்த மற்றொரு பெண் கைப்பையை எடுத்துச் செல்லும் காட்சிகள் உணவகத்தின் கண்காணிப்பு கமராவில் (CCTV) பதிவாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த கைப்பைக்குள் மாணவியின் இலங்கை தேசிய அடையாள அட்டை, பிரித்தானிய வங்கி அட்டைகள், விசா அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் 50 ஸ்டேர்லிங் பவுண்கள் பணம் ஆகியன இருந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் நுவரெலியா பகுதியில் பயணித்தமை தொடர்பான மேலதிக சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் சேகரித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நுவரெலியா பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைப்பையிலிருந்த பணம் தனக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள மாணவி, அதிலுள்ள முக்கியமான ஆவணங்களை மாத்திரம் மீள ஒப்படைத்தால், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நடவடிக்கைகளுக்காக விரைவில் மீண்டும் பிரித்தானியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், கைப்பை தவறுதலாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் அதிலுள்ள அத்தியாவசிய ஆவணங்களைத் திருப்பி ஒப்படைக்குமாறும் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நுவரெலியா பொலிஸாரைத் தொடர்புகொள்ள முடியும்.
- நுவரெலியா பொலிஸ் நிலையம்: 071 859 1097
- தொலைபேசி: 052 222 2222