ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய காலநிலை நிலைமைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை ஆகியவை இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வயல் நிலங்களில் பணிபுரிபவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் சேற்று நிலங்களில் வேலை செய்பவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நீண்டகாலமாக வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் பணிபுரிவோர் பாதுகாப்பான காலணிகளை அணிவதுடன், நோய்த்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.