8.4 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு: நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்!
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க, 8.4 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், அவருடைய முன்னாள் தனிப்பட்ட செயலாளரையும் அதே தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொஸ்பேட் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள மூன்று நிறுவனங்களிடமிருந்து 8.4 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாக சாமர சம்பத் தசநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று நிறுவனங்களுக்கும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொஸ்பேட் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அவர் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அவர் முதன்மைக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்தபோது இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்கவும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் ஏற்கனவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.