1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா 100 புதிய அம்புலன்ஸ்களை வழங்குகிறது
இலங்கையின் 1990 சுவசெரிய இலவச தேசிய அவசர அம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய அம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, நாளை (11) இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது 322 அம்புலன்ஸ்களுடன் இயங்கிவரும் சுவசெரிய சேவையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்புலன்ஸ்கள் இணைக்கப்படவுள்ளன.
அதிகப்படியான பயன்பாடு காரணமாக தற்போதுள்ள அம்புலன்ஸ்களில் இயந்திரக் கோளாறுகள் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அம்புலன்ஸ்கள் அனைத்தும் இணைந்து வருடாந்தம் சுமார் 90 இலட்சம் கிலோமீற்றர் தூரம் பயணிக்கின்றன.
இந்தியாவின் நிதியுதவியுடன் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை, 2018ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் இலவசமாகச் செயற்பட்டு வரும் இந்தச் சேவை, நாளாந்தம் சுமார் 1,000 முதல் 1,200 வரையான நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
புதிய அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த இந்திய அரசாங்கத்துடனான ஒப்பந்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.