விமான நிலையத்தில் கைதான கிருஷ்ணகுமார் மல்லாகம் நீதிமன்றத்தால் விடுதலை!
இந்தியாவில் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (50) கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (CTID) கைது செய்யப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை மீண்டும் ஒழுங்கமைக்க முயன்றதாகச் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் விசாரணைகளின் போது அவரிடமிருந்து சைனைட் குப்பிகள் கண்டெடுக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், தனக்கு எவ்வித ஆயுதத் தொடர்புகளும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் அவரது தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இந்தியாவில் தண்டனைக் காலம் முடிவடைந்து தாயகம் திரும்பிய கிருஷ்ணகுமாரை, மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் (CTID) கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.