இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்: 68 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த 68 சந்தேகநபர்கள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், 13 நாடுகளில் தங்கியுள்ள 112 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஒன்றிணைந்த தேசம்' (A Nation United) என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதன் முன்னேற்றம் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
2026ஆம் ஆண்டில் குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடைய 5,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், குறித்த சந்தேகநபர்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சுமார் 450 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் பெறுமதி அதிகரிப்பு
போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை எனக் கருதப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் உடைமைகளின் பெறுமதி தொடர்பான விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டார்.
இதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 2024ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாவாகவும், 2025ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
2026ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி 1,656 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.