வருமான வரி வழக்குகள்: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்கள் தள்ளுபடி!
வருமான வரிக் கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யாதது தொடர்பான ஆறு வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி, பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சரியாகச் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக ஆறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளின் விசாரணைகளில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா சார்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த ஆறு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த 2022ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது மீண்டும் அதே காரணங்களைக் குறிப்பிட்டு, தம்மை விடுவிக்குமாறு மனுத் தாக்கல் செய்துள்ளார்" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த ஆறு வழக்குகளையும் சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தான் வேண்டும். எனவே, வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்கக் கோரும் மனுக்களை ஏற்க இயலாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நீதிபதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட ஆறு மனுக்களையும் திரும்பப் பெறுவதாக எஸ்.ஜே.சூர்யா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.