ரம்பேவா பேருந்து விபத்து: காயமடைந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு – நால்வர் உயிரிழப்பு
அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் ஏ9 வீதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 70 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (10) காலை மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பேவ – வெலி ஓயா சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து ரம்பேவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது எதிர்த் திசையில் வந்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் குறித்த பேருந்து நேருக்கு நேர் மோதியதுடன், தனியார் பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் காயமடைந்த சுமார் 70 பேர் சிகிச்சைக்காக அநுராதபுரம் மற்றும் மதவாச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நால்வரின் சடலங்களும் ரம்பேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.