மேல் மற்றும் தென் மாகாணங்களில் வீடுதோறும் உரமாக்கல் திட்டம் அறிமுகம்
அரசாங்கத்தின் ‘Clean Sri Lanka’ தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ், மேல் மற்றும் தென் மாகாணங்களில் வீடுதோறும் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களால் அடையாளம் காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட வீதிகள், சேதனக் கழிவுகளைச் சேகரிக்கும் சேவை வழங்கப்படாத பகுதிகளாக அறிவிக்கப்படவுள்ளன. இதன்படி, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளில் உருவாகும் மக்கும் கழிவுகளைத் தாங்களே உரமாக மாற்றி முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
இதற்காக, தெரிவுசெய்யப்பட்ட வீடுகளுக்கு உரம் தயாரிக்கும் தொட்டிகள் (Compost Bins) வழங்கப்படவுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி வீடுகளிலேயே மக்கும் கழிவுகளை சேதனப் பசளையாக மாற்றுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
ஆரம்பகட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான மூன்று வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘Clean Sri Lanka – Pivithuru Purawara’ தேசிய திடக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் உருவாகும் திடக்கழிவுகளில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை மக்கும் சேதனக் கழிவுகளாக இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கழிவுகளை வீடுகளிலேயே உரமாக மாற்றுவதன் மூலம், கழிவுகளைச் சேகரித்தல், போக்குவரத்து செய்தல், வகைப்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் இறுதியாக அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதன் நடைமுறைப்படுத்தலை உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிக்கவுள்ளன.
தேசிய திடக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.