மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை மேம்படுத்த புதிய LINAC இயந்திரங்கள்!
மஹரகம அபேக்ஷா தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் கதிரியக்கச் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், புற்றுநோயாளர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால காத்திருப்பைக் குறைப்பதற்கும் புதிய லீனியர் ஆக்சிலரேட்டர் (LINAC) இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதுடன், CT சிமுலேட்டர் வசதிகளையும் மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் வைத்தியசாலையின் சிகிச்சை வழங்கும் திறனை அதிகரித்து, சேவைகளின் வினைத்திறனை மேம்படுத்துவதுடன், நோயாளர்களுக்குத் தாமதமின்றி கதிரியக்கச் சிகிச்சைகளை வழங்குவதே நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அண்மையில் அபேக்ஷா வைத்தியசாலையில் சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, அதிகளவான புற்றுநோயாளர்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சைகளை வழங்கும் வகையில் புதிய LINAC இயந்திரங்களைக் கொள்வனவு செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், கதிரியக்கச் சிகிச்சைகளைத் திட்டமிடுவதற்கு அத்தியாவசியமான CT சிமுலேட்டர் வசதிகளை மேம்படுத்துதல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள், தொழில்நுட்ப வசதிகளை நவீனப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், விசேட மருத்துவ நிபுணர்கள், கதிரியக்கச் சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள், மருத்துவ இயற்பியலாளர்கள் உள்ளிட்ட மருத்துவ மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் (CECB) தொழில்நுட்ப உதவியுடன் வைத்தியசாலைக்கான புதிய முழுமையான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றமும் இதன்போது பரிசீலிக்கப்பட்டது.
வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தற்போதுள்ள இடவசதிகளைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் எதிர்கால சிகிச்சைத் தேவைகளுக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதற்கு மேலதிகமாக, மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பு, வைத்தியசாலையின் டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறும் முக்கிய வைத்தியசாலையாக அபேக்ஷா வைத்தியசாலை விளங்குவதால், அதன் கதிரியக்கச் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானது எனப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி வலியுறுத்தினார்.
அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.