போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 7 கோடி ரூபாய் வங்கிப் பரிவர்த்தனை – பெண் கைது!
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் 49 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸாரின் தகவலின்படி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், பிலியந்தலை பகுதியில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளில் குறித்த பெண் நான்கு வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வங்கிக் கணக்குகள் ஊடாக 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களால் குறித்த கணக்குகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பணமோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றுமொரு விசாரணையில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவரின் சகோதரியே கைது செய்யப்பட்ட பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐவரில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாதபத்த பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், கடந்த வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.