பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்!
கொபேகனே பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடமையில் அசமந்தமாகச் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தப் பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி, பொலிஸ் காவலில் இருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், நிகவெரட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
கொபேகனே, பெத்தேகம பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் குறித்த சந்தேகநபரை, அப்பகுதி கிராம மக்கள் பிடித்து கொபேகனே பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சந்தேகநபரைப் பிடித்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நான்கு கிராமவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.