வெப்ப அழுத்தத்தால் இலங்கையில் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பணியிடங்களில் ஏற்படும் வெப்ப அழுத்தம் காரணமாக, 2023ஆம் ஆண்டில் இலங்கையில் 1,20,000க்கும் அதிகமான முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை நேர இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.
1985 முதல் 2014 வரையிலான காலப்பகுதியின் சராசரி நிலைமையுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அழுத்தத்தின் விளைவாக இந்த வேலை நேர இழப்பு பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்தித்திறன் மீதான தாக்கங்கள்' (Impacts of Heat Stress on Jobs and Productivity in Sri Lanka) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக 2023ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் மேலதிகமாக 6.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயத் துறையே அதிகம் பாதிப்பு
வெப்ப அழுத்தம் காரணமாக இழக்கப்பட்ட வேலை நேரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வேலைவாய்ப்பு இழப்புகளில் விவசாயத் துறையே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்த வேலை நேர இழப்பில் விவசாயத் துறை 48 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன், சேவைகள் துறை 22 சதவீதத்தையும், உற்பத்தித் துறை 13 சதவீதத்தையும், கட்டுமானத் துறை 11 சதவீதத்தையும், போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறைகள் இணைந்து 6 சதவீதத்தையும் கொண்டுள்ளன.
மேலும், மதிப்பிடப்பட்ட மொத்த வேலை நேர இழப்பில் 35 சதவீதமானவை ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் அதிக வெப்பநிலை நிலவும் காலப்பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
1960களிலிருந்து வெப்பநிலை அதிகரிப்பு
1960களுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சராசரி வெப்பநிலை சுமார் ஒரு பாகை செல்சியஸால் அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, நாட்டின் மழைவீழ்ச்சி முறைகளும் படிப்படியாக கணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கான காலநிலைத் தரவுகளும் வெப்பநிலை அதிகரிக்கும் வேகம் தீவிரமடைந்து வருவதைக் காட்டுகின்றன. மேலும், அதீத வெப்பநிலை நிகழ்வுகள் அடிக்கடியும் முன்னரை விட அதிக தீவிரத்துடனும் இடம்பெற்று வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிக்கும் அபாயம்
அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம் காரணமாக வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்தித்திறன் மீதான தாக்கங்கள் எதிர்வரும் தசாப்தங்களில் மேலும் மோசமடையக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதன்படி, உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் அளவைப் பொறுத்து, 2040ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஆண்டுதோறும் 1,45,000 முதல் 2,21,000 வரையிலான முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை நேர இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2060ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 1,58,000 முதல் 3,49,000 வரையிலான முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான அளவுக்கு அதிகரிக்கக்கூடும்.
பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மிக அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், வரலாற்று அடிப்படை நிலைமையுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வருடாந்த பொருளாதார உற்பத்தி 15.2 சதவீதத்தால் குறைவடையக்கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.
தொழிலாளர்களைப் பாதுகாக்கப் புதிய நடவடிக்கைகள் அவசியம்
விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அதிக வெப்பநிலைக்கு நீண்ட நேரம் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாலும், உடல் உழைப்பு அதிகமுள்ள பணிகளில் ஈடுபடுவதாலும் வெப்ப அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும் உற்பத்தித்திறன் இழப்பைக் குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, பணியின்போது முறையான ஓய்வு இடைவெளிகளை அறிமுகப்படுத்துதல், போதுமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், பணியிடங்களில் காற்றோட்டத்தை மேம்படுத்துதல், குளிரூட்டும் வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப வேலை நேரங்களை மாற்றியமைத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையின் பாதிப்புகளிலிருந்து இலங்கையின் தொழிலாளர் வளத்தைப் பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றங்களுக்கு எதிராக நாட்டின் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் உரிய காலநிலைத் தழுவல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.