பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்: ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!
பொலிஸ் காவலில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடைநீக்கம் ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் தலைமையகப் பொலிஸ் பரிசோதகரான எம்.ஆர்.எஸ். பிரஜன் சேனநாயக்கவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது கடமைகளில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபர் இந்த இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி, 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தடுப்புக்காவலில் இருந்த சந்தேகநபரின் உடல்நிலை குறித்து முறையான கண்காணிப்பை மேற்கொள்ளத் தவறியமை, விசாரணை அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்காமை மற்றும் கைது தொடர்பான பதிவுகளைச் சரியாகப் பராமரிப்பதை உறுதிப்படுத்தத் தவறியமை உள்ளிட்ட குறைபாடுகள் தலைமையகப் பொலிஸ் பரிசோதகருக்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸ் நிலையத்தில் இரு நபர்களை சட்டவிரோதமாகத் தடுத்து வைப்பதற்கு இடமளிக்கும் வகையில், தனது கீழ் பணியாற்றிய உத்தியோகத்தர்களை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக, ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.