நீர்கொழும்பு சிறைச்சாலை சிசிடிவி தரவுகள் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைப்பு: குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்கிருந்த இரு சிசிடிவி காணொளிப் பதிவுக் கருவிகளின் (DVR) வன்வட்டுகள் (Hard drives) மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை (16) நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் அண்மைக்கால முன்னேற்றங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்து இதனைக் குறிப்பிட்டனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட இந்த வன்வட்டுகள், தடயவியல் அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிய நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம், நில அளவைத் திணைக்களத்தினால் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
விசாரணைகளின் தொடர்ச்சியாக, உயிரிழந்த கைதி ஒருவருடைய இரத்த மாதிரிகள் மற்றும் ஆடைகளை மேலதிகப் பரிசோதனைக்காகவும் தடயவியல் அறிக்கைக்காகவும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிப்பதற்கான அனுமதியையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இதன்போது கோரியிருந்தனர்.
இதேவேளை, சிறைச்சாலை வன்முறைகளின் போது உயிரிழந்த மூன்று கைதிகளின் மரணங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளுக்கான சாட்சியங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் இதன்போது சாட்சியமளித்தனர்.
மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த ஒரு கைதி மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் புலனாய்வு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
மரணங்கள் குறித்த மேலதிக சாட்சியப் பதிவுகளுக்காகவும் விசாரணைகளின் அடுத்தகட்ட முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவும் வழக்கை எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.