நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: விமல் வீரவன்சவுக்கு மீண்டும் அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், தனது தரப்பு விளக்கங்களை முன்வைப்பதற்காகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானது எனக் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஏற்கனவே விமல் வீரவன்சவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பித்திருந்தது.
எனினும், குறித்த தினத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.