தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்த ‘ஜெயிலர் 2’: ரூ.800 கோடியைக் கடந்த வசூல்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளாவிய வசூலில் ரூ.800 கோடி என்ற மைல்கல்லைக் கடந்து தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது.
திரையரங்குகளில் வெளியான 18 நாட்களிலேயே இப்படம் உலகளாவிய ரீதியில் சுமார் ரூ.807.25 கோடி வசூலித்துள்ளதாக Box Office வசூல் தரவுகளைக் கண்காணிக்கும் Sacnilk நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உலகளாவிய வசூலில் ரூ.800 கோடியைக் கடந்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளது.
இந்தியாவில் இப்படம் ரூ.533.75 கோடி மொத்த வசூலைப் பெற்றுள்ளதுடன், வெளிநாட்டுச் சந்தைகள் மூலம் ரூ.273.50 கோடி வசூலித்துள்ளது.
இந்தச் சாதனையின் மூலம், கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் படைத்திருந்த முந்தைய வசூல் சாதனையையும் ‘ஜெயிலர் 2’ முறியடித்துள்ளது. இதன் மூலம் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படத்தில் நடித்த நடிகர் என்ற புதிய சாதனையையும் ரஜினிகாந்த் தன்வசப்படுத்தியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும்.
இதில், ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார்.
மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெயிலர் 2’ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.