டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த புதிய செயல்பாட்டு மையம் – சுகாதார அமைச்சு நடவடிக்கை
நாட்டில் நுளம்புகளின் பெருக்கம் மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக புதிய செயல்பாட்டு மையமொன்றை சுகாதார அமைச்சு நிறுவியுள்ளது.
இதற்கமைய, சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்தம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் கீழ், டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு செயல்பாட்டு அலுவலகம் நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை நிறுவப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், அவற்றில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதும் இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
மாறிவரும் காலநிலை நிலைமைகள் காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின்போது முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் புதிதாக நிறுவப்பட்ட செயல்பாட்டு மையத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, 'Clean Sri Lanka' செயலகம், இலங்கை பொலிஸ், முப்படையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.