ஜெர்மனியில் தீவிரமடையும் ஜென்-ஸி போராட்டம்: பிராங்க்பர்ட்டில் கடைகள் சூறை; பொலிஸார் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
ஜெர்மனியில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஜென்-ஸி தலைமுறையினர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிராங்க்பர்ட் நகரில் போராட்டக்காரர்கள் கடைகளைச் சூறையாடியதுடன், பொலிஸார் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு, கட்டாய இராணுவச் சேவைத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெர்மனி முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘ஜென்-ஸி ரிகெல்ட்’ (Gen-Z Riegelt) என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த இயக்கம், பெர்லின், பிராங்க்பர்ட், முனிச், ஹம்பர்க் உள்ளிட்ட 34-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை முன்னெடுத்து வருகிறது.
கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணவீக்கத்தால் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், அரசாங்கம் பரிசீலித்து வரும் கட்டாய இராணுவச் சேவைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
“நாங்கள் அமைதிக்காகவும் சுதந்திரத்திற்காகவுமே போராடுகிறோம். போருக்காகவோ கட்டாய இராணுவச் சேவைக்காகவோ அல்ல. கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும்” என பெர்லினில் நடைபெற்ற பேரணியில் அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் லினா பிரெட்ரிக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரப் பேரணிகள் அமைதியான முறையில் நடைபெற்றபோதிலும், சனிக்கிழமை இரவு பிராங்க்பர்ட் நகரின் மையப்பகுதியில் போராட்டம் வன்முறையாக மாறியது. இதன்போது வணிக வளாகங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், இரண்டு பெரிய கடைகள் முற்றாகச் சூறையாடப்பட்டன.
மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அவசரகால வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள், பட்டாசுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹம்பர்க் நகரில் வீதித் தடுப்புகளுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், கொலோன் பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் நீர்த்தாரை வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இளைஞர்களின் போராட்டங்களைத் தீவிர இடதுசாரி அமைப்புகளும் வெளிநாட்டுத் தீவிரவாத ஆதரவுக் குழுக்களும் தங்களின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிப்பதாக ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பிரான்ஸ், செர்பியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே ஜெர்மனியிலும் ஜென்-ஸி போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.