சுகாதாரம், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இலங்கை – தாய்லாந்து ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!
சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், தாய்லாந்தின் துணைப் பிரதமரும் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சருமான பேராசிரியர் யோட்சனன் வோங்சாவத்துக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி தாய்லாந்தின் பாங்கொக்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில், ஐந்தாவது ஆசிய – பசிபிக் பிராந்திய அமைச்சர்கள் மாநாட்டின் பக்க நிகழ்வாக இந்த இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலங்கையின் சுகாதார சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், சுகாதாரத் துறையில் தொழில்நுட்ப அறிவையும் நிபுணத்துவத்தையும் பரிமாறிக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளினதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையில் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் விஞ்ஞான ரீதியான நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் தாய்லாந்திடமிருந்து நவீன தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தாய்லாந்து முதலீடுகளை ஊக்குவிப்பது மற்றும் இரு நாடுகளையும் இலக்காகக் கொண்ட கூட்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, தேரவாத பௌத்த பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மத, சமூக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.