சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தலையிடுவதாக சஜித் குற்றச்சாட்டு!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதன் மூலம், அரசாங்கம் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற வகையில் தலையிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறிப்பிட்ட சில சரத்துகளில் திருத்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்த முடியும் என எதிர்க்கட்சியினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்ட அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கும் அதன் உள்ளடக்கங்களைத் தீர்மானிப்பதற்கும் எதிர்க்கட்சிக்கு முழுமையான உரிமை இருப்பதாக வலியுறுத்தினார்.
மேலும், பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் மூன்று பிரதான கட்டமைப்புகளுக்கும் இடையில் அதிகாரச் சமநிலையும் பரஸ்பரக் கண்காணிப்பு முறையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைச் சமர்ப்பிப்பது நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 29(1) மற்றும் 29(2) ஆகியவற்றின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதன் உள்ளடக்கங்களைத் திருத்தியமைக்குமாறு எதிர்க்கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறையின் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இதனைத் தாம் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், விவாதமின்றி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பாகத் தாமும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் சாணக்க மதுகொட ஆகியோரும் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்ததாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.