சட்டவிரோத பிரமிட் நிதித் திட்டத்தை நடத்தி ஊக்குவித்ததாக 48 வயதுடைய நபர் கைது!
சட்டவிரோத பிரமிட் நிதித் திட்டமொன்றை நடத்தி, அதனைப் பொதுமக்களிடையே ஊக்குவித்ததாகக் கூறப்படும் 48 வயதுடைய நபர் ஒருவர் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட குறித்த நிதித் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இந்த நிதித் திட்டத்தை நடத்துதல், நிர்வகித்தல், ஊக்குவித்தல் மற்றும் விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், அதன் ஊடாகப் பணம் சம்பாதித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இத்திட்டத்தில் பணத்தை வைப்புச் செய்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் இழைத்ததாகக் கூறி, கடந்த வியாழக்கிழமை (05) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.