கிரிஷ் ஒப்பந்த விவகாரம்: நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!
கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச ஊழல் விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் இருந்தால், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நவம்பர் 03ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான மற்றுமொரு வழக்கில் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் நிறுவனக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நாமல் ராஜபக்ஷவும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காரணமாகவே நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானக் கொள்வனவுடன் தொடர்புடையதாக 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பில் நவம்பர் 19ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவை கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, கிரிஷ் விவகாரத்தில் பிணை பெற்றிருந்த போதிலும், அவர் இன்று சிறைச்சாலை காவலில் இருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.