காசாவில் கட்டடம் இடிந்து 20 பேர் பலி: 100 பேர் சிக்கியுள்ளதாக அச்சம்!
காசா நகரின் தல் அல்-ஹவா பகுதியில் போரினால் கடுமையாகச் சேதமடைந்திருந்த 6 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டடமொன்று திடீரென இடிந்து விழுந்ததில், 5 சிறுவர்கள் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அபாயகரமான கட்டடம் எனப் பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும், மாற்று உறைவிட வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அங்குத் தங்கியிருந்த நிலையிலேயே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே இக்கட்டடம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மேலும் 70 முதல் 100 பேர் வரையிலானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகத் தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெறாததால், சிவில் பாதுகாப்பு மீட்புக் குழுவினர் ஆரம்பத்தில் வெறும் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முகவர் நிலையங்கள் மற்றும் எகிப்திய நிவாரணப் பணியாளர்களிடமிருந்து சில இயந்திரங்கள் பெறப்பட்டு மீட்புப் பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
காசா பகுதி முழுவதும் போரினால் சேதமடைந்த சுமார் 400 கட்டடங்கள் உடனடியாக இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாகவும், எதிர்வரும் குளிர்காலம் இதனை மேலும் அச்சுறுத்தலாக மாற்றியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில், குளிர்கால மழை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான கூடாரங்கள், தார்பாய்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான கனரக இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலிக்பரோவ் தீவிர கோரிக்கை விடுத்துள்ளார்.